தமிழகத்தில் சம்பா அறுவடை நடந்து வரும் கடலூர் மாவட்டத்தில் தான் நெல் பயிரில் வைரஸ் நோய் தாக்கி விவசாயிகளை கண்ணீரில் மிதக்க வைத்து வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலம் பூண்டி, சித்தலம்பாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்கள் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு செழித்து வளர்ந்து கதிர்கள் முற்றி காணப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் பொங்கல் திருவிழாவை தங்கள் வயல்களில் கொண்டாடினர்.
இந்த நிலையில் மீதிகுடியை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவரின் வயலில் அழைக்காமல் வந்தது அந்த விபரீத நோய். அவரது வயலில் முற்றிய நிலையில் காணப்பட்ட நெற்கதிர்களை மஞ்சள் நிற கட்டிகள் போல் ஒட்டிக் கொண்டிருந்தது. வயலில் பாதி அளவிற்கு இதேபோல் காணப்பட்ட நிலையில் மறுநாள் கருப்பு நிறமாக மாறி பயிர்கள் பதறாக மாறிப் போனதை கண்டு அதிர்ச்சியில் கண்ணீர் விட்டுக் கதறினார்.
இதுபோன்று சுற்றுவட்டாரங்களில் உள்ள அனைத்து வயல்களிலும் வேகமாக பரவி பயிர்களை நாசமாக்கி வருகிறது. நல்ல மகசூல் கிடைக்கும் என்று உற்சாகத்தில் இருந்த விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த நெற்கதிர்களை பூச்சி தாக்குதலால் பதறாக மாறுவதை கண்டு வீட்டிற்குக் கூட செல்லாமல் வட்டிக்கு வாங்கிய கடனை எப்படி கட்ட போகிறோம் என்ற வேதனையில் தவித்து வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நாங்கள் இது போன்ற பூச்சித் தாக்குதலை பார்த்ததே இல்லை. இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று நிற்பவர்களில் மஞ்சள் கட்டி போல் வந்துள்ளது என்று கூறி மருந்துகளை வாங்கி வந்து மூன்று முறைக்கு மேல் தெளித்தும் பயனில்லை என்கிறார் விவசாயி.
இதையடுத்து பயிர்களை பரிசோதித்த வேளாண் அதிகாரிகள் இது லட்சுமி வைரஸ் என்ற வகையைச் சார்ந்த கிருமியின் தாக்குதலால் பயிர்களில் ஏற்படும் நோயாகும் என்றும் அதிக மகசூல் உள்ள வயல்களில் இந்த நோய் மின்னல் வேகத்தில் காற்று மூலம் பரவும் தன்மை கொண்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.