மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முனியாண்டி கோயிலில் நடைபெற்ற மெகா பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி முனியாண்டி சாமி கோயிலில் 85வது ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகம் ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்திவரும் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதையொட்டி நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பெண்கள் தேங்காய் பழம் பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்தனர்.
விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு கோயில் வளாகத்திலேயே பிரியாணி சமைக்கப்பட்டது. இதனை அடுத்து கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த கிராம மக்களுக்கு அசைவ பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது. இதனை மக்கள் போட்டி போட்டு பிரியாணி வாங்க முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து போலீசார் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி பிரியாணி விநியோகம் செய்ய உதவினார்.