கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் நோம்பி கோடு என்ற இடத்தில் கடந்த 15ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் பள்ளிவாசலுக்குச் சென்று விட்டு தந்தையுடன் சுபையர் என்ற வாலிபர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 16ம் தேதி சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் ஆர்எஸ்எஸ் தொண்டரான சீனிவாசன் என்பவரை மர்ம கும்பல் கடைக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்தது. இந்த இரண்டு அரசியல் கொலைகளும் பழிக்குப்பழி நடைபெற்றதாக கூறப்படுகின்றது.
தொடர்ந்து இரண்டு கொலை வழக்கு சம்பந்தமாக ஏடிஜிபி விஜய் தலைமையில் விசாரணை நடந்து வந்தது. இதையடுத்து சுபையர் கொலை செய்த வழக்கில் ரமேஷ், ஆறுமுகம் மற்றும் சரவணன் ஆகிய மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களை கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இன்று அவர்கள் கைது உறுதி செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சீனிவாசன் கொலை வழக்கில் சில குற்றவாளிகள் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது. அவர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.