அரசு பேருந்து மீது கல் வீசிய தொழிலாளிகள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தடம் எண் 17 என்ற அரசு பேருந்து பொள்ளாச்சி – ரமண முதலிபுதூருக்கு இயங்கி வருகிறது. இந்தப் பேருந்தை கடந்த 17ஆம் தேதி அன்று இரவு ஓட்டுநர் அருண் பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்று கொண்டிருக்கும்போது கோட்டூர் அருகில் ரமண முதலிபுதூர் தண்ணீர் மடம் பகுதியில் உள்ள வளைவில் சென்றது. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது கல் வீசியதில் கண்ணாடி சேதமடைந்துள்ளது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே பெத்தநாயக்கனூர் பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கோட்டூரை சேர்ந்த தொழிலாளிகள் 36 வயதுடைய ஹரிகிருஷ்ணன், 33 வயதுடைய ராம்முருகன் என்பதும், இவர்கள் தான் பேருந்தின் பின்புறம் கல் வீசியது என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் கோட்டூர் சந்தைப்பேட்டை பகுதியில் வைத்து பேருந்து ஓட்டுநர், ஹரிகிருஷ்ணன், ராம்முருகனைப் பார்த்து ஓரமாக செல்லுங்கள் என்று கூறியாதல் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த அவர்கள் பேருந்தை பின்தொடர்ந்து வந்து இருட்டான பகுதியில் வைத்து கல் வீசினார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.