பிரசித்தி பெற்ற கோவிலின் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், கரகம் பாலித்தல், அம்மனுக்கு சிறப்பு ஹோமம், யாகபூஜை, சிவஹோமம் போன்ற ஏராளமான பூஜைகள் நடைபெற்றது. அதன்பிறகு பக்தர்கள் பறவை காவடி, பூ காவடி போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதன்பிறகு சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜையுடன் விழா சிறப்பாக நிறைவடைந்தது. இதேப்போன்று கூடலூர் பகுதியில் இருக்கும் முனீஸ்வரர் துர்க்கை அம்மன் கோவிலில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு நவக்கிரக ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் பெண்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.