மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே ரேஷன் கடை அமைத்துத் தர கோரிக்கை விடுத்து ஆட்சியர் அலுவலகம் முன் திடீரெனெ சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாலமடை கிராமத்தில் அம்மன் கோவில் தெரு மற்றும் இந்திரா நகர் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடையானது , சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதால் மாதம்தோறும் அதிக தொலைவு அலைந்து, ரேஷன் பொருள்களை வாங்கி வர வேண்டிய நிலை உள்ளது. எனவே இதனால் சிரமமாக இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே தங்களுக்கு ஒரு ரேஷன் கடை கட்டித்தருமாறு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை ஒன்றை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து, நேற்று மேற்கண்ட இரு தெருவினை சேர்ந்த பொதுமக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த போராட்டத்தில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, அவர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத
அரசை கண்டித்து, தங்கள் குடும்ப அட்டையை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக கைகளை உயர்த்திக் காட்டியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்திய பின், பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர்.
மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறியுள்ளதாவது,நாங்கள் மாதம்தோறும் 2 கிலோ மீட்டர் தூரம் அலைந்து ரேஷன் பொருள் வாங்க வேண்டியுள்ளது. எனவே எங்கள் பகுதியில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் ரேஷன் கடை கட்டி தர வேண்டும் என்று ஏற்கனவே வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவு ஆகிய இடங்களில் மனுக்களை அளித்துள்ளோம். இருந்தாலும் தற்போது வரை எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று கூறினர். மேலும் உடனடியாக எங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தராவிட்டால் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் . இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.