இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் பெண் உள்பட 3 பேரை தாக்கிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வெங்கரை பகுதியில் பாலமுருகன்(19) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் நடைபெற்ற விழாவில் ஒலிபெருக்கியை சத்தமாக வைத்து தெருவில் ஆட்டம் போட்டுள்ளார். இதனை அதே பகுதியை சேர்ந்த முருகேசன், அவரது மனைவி மணிமேகலை மற்றும் ராஜா ஆகியோர் தட்டிகேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது முருகேசன், ராஜா ஆகிய இருவரும் பாலமுருகன் மற்றும் அவருக்கு ஆதரவாக பேசிய குமரேசன்(21) அவரது தாய் கலா ஆகிய 3 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜா மற்றும் முருகேசனை ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.