ஓபிஎஸ்ஸுக்கு பதிலடி தரும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை அதிமுகவில் முன்னிலைப்படுத்தி பிரபலப்படுத்தி கொள்ள அவர் எடுக்கும் இத்தகைய பகீரதப் பிரயத்தனங்கள் குறித்து எங்களுக்கு எதுவும் கவலை இல்லை. ஆனால் இன்றைக்கு இந்திய திரு நாட்டில் உள்ள முதலமைச்சர்களின் முதன்மையானவர் என பல்வேறு அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் இந்திய அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் நோக்கர்களும் நம்முடைய முதலமைச்சரை போற்றுவதே கண்டு மனம் பொறுக்காமல் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் சொத்தை வாதம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு அதன் பேரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பன்னீர்செல்வம் குளிர்காய முற்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை பயன்படுத்துங்கள் என்று சொன்னவுடனே தமிழ்நாட்டின் மகனாக இருக்கும் நம்முடைய முதல்-அமைச்சர் உள்துறை அமைச்சரின் இந்த கருத்திற்கு இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயல் எனவும் ஒற்றை மொழி என்பது ஒற்றுமை உதவாது ஒருமைப்பாட்டு உருவாக்காது எனவும் தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் தனது நிலைப்பாட்டினை உறுதிபட கூறியுள்ளார். உண்மையான தமிழ் உணர்வும் அக்கறையும்இருக்குமானால் எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பாசாங்கு செயலைத்தான் ஓ பன்னீர்செல்வம் கண்டித்திருக்க வேண்டும் அல்லாமல் முதலமைச்சர் மீது உள்நோக்கம் கற்பிக்கக் முனைந்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் தோற்றுவிப்பது பற்றியும் ஒபிஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகுதான் ஜெர்மனியிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்த் துறைக்கு 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு இருக்கிறது.செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தலைவர் கலைஞர் அவர்களது பெயரில் செம்மொழித் தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அவர்கள், செம்மொழிச் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள ஐந்து பல்கலைக்கழகங்களில் ‘செம்மொழித் தமிழ் இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருப்பதையும் அவருக்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கின்றேன் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு ஓபிஎஸ்ஸுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.