கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சூழ்நிலையை அனுபவிப்பதற்காக கடந்த நான்கு தினங்களாக 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.
சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் இதமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். இதற்கிடையில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதையடுத்து பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன் மரக்காடு, கோக்கர் ஸ்வாக், மோயர் பாயிண்ட், குணா குகை உள்ளிட்ட இடங்களிலும், பாம்பார் நீர்வீழ்ச்சி, தேவதை அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதேபோன்று நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிசாலையில் குதிரை சவாரி செய்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சுற்றுலா அதிகாரிகள் கூறியதாவது, கடந்த நான்கு தினங்களாக தொடர் விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு சுமார் மூன்று இலட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மேலும் நகரில் அமைந்துள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் தங்கு விடுதி உரிமையாளர்கள் சந்தோஷம் அடைந்தனர். அதேபோன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் நகரில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல தரப்பினரும் ஆனந்தம் அடைந்தனர்.