நகை வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் தகராறு தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நகைகளை கொள்முதல் செய்து கொடுப்பதற்காக முத்துக்குமாரிடம் இருந்து 30 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை வாங்கியுள்ளார். இதில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை மட்டும் மணிகண்டன் கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகைக்கான நகைகளை மணிகண்டன் கொடுக்கவில்லை.
இது தொடர்பாக முத்துக்குமார் மணிகண்டனிடம் கேட்டுள்ளார். அப்போது மணிகண்டன் சாதி பெயரை சொல்லி முத்துக்குமாரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து முத்துக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.