பயங்கர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே சீதப்பால் பகுதியில் முத்து கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இவர் தன்னுடைய நண்பர் முகர்ஜிபாஸை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன்பிறகு முகர்ஜி பாஸ், முத்து கிருஷ்ணன் உள்பட 3 பேர் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். இவர்கள் சுசீந்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் முத்துகிருஷ்ணன், முகர்ஜிபாஸ் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் வேனில் வந்தவர்கள் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து சுசீந்திரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து கன்னியாகுமரியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா விபத்து நடந்த இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த விபத்தில் உயிரிழந்த மற்றொரு வாலிபரின் விவரம் குறித்து தெரியவில்லை. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.