காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பள்ளமடை கிராமத்தில் விவசாயியான அக்னி மாடன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாடத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சீவல்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தமிழர் விடுதலை களம் இயக்க ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். இந்நிலையில் சீவல்ராஜ் அப்பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இதற்கு மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக சீவல்ராஜுக்கும், மாணவியின் அண்ணன் கல்லூரி மாணவரான அஜித் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் சீவல்ராஜ் தனது வீட்டு மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென மாடிக்கு சென்ற அஜித் சீவல்ராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனையடுத்து மகனின் அலறல் சத்தம் கேட்டு சீவல்ராஜின் பெற்றோர் அங்கு சென்று அஜித்தை தடுக்க முயன்றனர்.
அப்போது அஜித் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதற்கிடையில் சீவல்ராஜ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீவல்ராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காளிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.