குற்றாலம் அருவிக்கு குளிக்க சென்ற ஒருவர் கீழே தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திட்டங்குளம் பூந்தோட்ட காலனியில் வசிக்கும் 5 பேர் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். தற்போது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 4 பேர் அருவிக்கு செல்லும் வழியில் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் குமார் என்பவர் மட்டும் ஒரு பாலம் மீது படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் காலை எழுந்து பார்த்தபோது குமார் காணாமல் போனதைக் கண்டு உடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பின் பாலத்தின் கீழே இருக்கும் பள்ளத்தில் தண்ணீர் வரும் பாதையில் குமார் விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி குமாரின் உடலை வெளியே தூக்கி வந்தனர். அதன் பிறகு குமாரின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலத்தின் மீது படுத்து தூங்கியதால் உருண்டு கீழே விழுந்து குமார் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.