திருவள்ளூர் அருகில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க கழக அமைப்புச் செயலாளருமான கோ.அரிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வெளி மாநிலங்களுக்கு போகும் வாடிக்கையாளர்கள் வந்து தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு செல்வது வழக்கம் ஆகும். இந்நிலையில் இன்று காலையில் அவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிற்கு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் காரில் வந்து இருந்தனர். இதயடுத்து அவர்கள் காருக்கு டீசல் நிரப்பிக் கொண்டு திரும்ப செல்வதற்காக வாகனத்தை ஸ்டார்ட் செய்துள்ளனர். அப்போது அவர்கள் வாகனத்திலிருந்து வழக்கத்திற்கு மாறாக பெரும்பாலான புகை வெளியேறி இருக்கிறது.
அவ்வாறு அவர்களது வாகனத்திலிருந்து இதுவரையிலும் புகை வந்தது இல்லை என்பதை அறிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்து இது தொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களிடம் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பத்திரிக்கையாளர்கள் அங்கே குவிந்தனர். அப்போது செய்தியாளர் ஒருவர் இது தொடர்பாக செய்தி சேகரிக்க அங்கு சென்றிருந்தார். அதன்பின் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இச்சம்பவம் தொடர்பாக அவர்களது முதலாளி முன்னாள் எம்பி கோ.அரிக்கும் தகவல் தெரிவித்ததை அடுத்து அவரும் அங்கு விரைந்து வந்துள்ளார். அவர் இது தொடர்பாக பெட்ரோல் நிரப்பவந்த அந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அவர் அந்த குடும்பத்தினரிடம் தரக்குறைவாக பேசும் அச்சம்பவத்தினை அங்கு இருந்த பத்திரிகையாளர்கள் படம்பிடித்தனர். அவர்களிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு படம்பிடிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்த நிலையில், செய்தியாளர் தன் செல்போனில் இச்சம்பவத்தை படம் பிடிக்கத் தொடங்கினார். அப்போது முன்னாள் எம்பி அவரிடத்தில் சென்று ஏன் செல்போனில் படம் பிடிக்கிறீர்கள்..? எனக்கூறி அவரது செல்போனை பறித்ததோடு மிரட்டல் விடுத்துள்ளார். இவ்வாறு வண்டியில் இருந்து ஏன் இவ்வாறு புகை வருகிறது என்று கேட்டால் அதற்கு சரிவர பதில் கூறாமல் அங்கு இருந்த வாடிக்கையாளர்களையும், பத்திரிகையாளர்களையும் முன்னாள் எம்பி மிரட்டி துரத்தும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.