உத்தரகாண்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று ஹரித்வாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “சுவாமி விவேகானந்தர், அரவிந்தர் போன்ற மகான்கள் இந்தியாவை பற்றி கூறியதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அரவிந்தர், பகவான் கிருஷ்ணரின் விருப்பப்படி இந்தியா எழுச்சி பெறும் என்று தீர்க்கமாக கூறியுள்ளார். தற்போது இந்தியா அடைந்துவரும் எழுச்சியின் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது அகண்ட பாரதம் வரும் 15 ஆண்டுகளில் சாத்தியமாகும் என்பது என்னுடைய கணிப்பு. நாம் அனைவரும் நமது இந்த இலக்கை வேகமாக அடைய இணைந்து பணிபுரிய வேண்டும்.
இந்தியா, உலகம் முழுவதும் உள்ள அனைத்து விதமான மக்களையும் வரவேற்றுள்ளது. கீதையில் கிருஷ்ணர் நல்லனவற்றை செய்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ் பாஜகவை பின்புலத்திலிருந்து இயக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ள நிலையில் அகண்ட பாரதம், அரவிந்தர், விவேகானந்தர், கிருஷ்ணர் என்று மோகன் பகவத் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.