திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் சாதி பிரச்னை காரணமாக மாணவர்கள் மீது பாரபட்சம் காட்டும் பேராசிரியர்கள், சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பகுஜன் சமாஜ்வாதி கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரசினர் கலைக்கல்லூரி ஒன்று இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரியில் திருத்தணி, அதனைச் சுற்றியுள்ள கிராமத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் அதிகமாகப் படித்துவருகின்றனர். அதேபோன்று அப்பகுதியில் பெரும்பான்மையாக வன்னியர் சமூகத்தினர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தக் கல்லூரியில் சாதி பிரச்னை காரணமாக அடிக்கடி மாணவர்களிடையே மோதல் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய பேராசிரியர்கள் இதைக் கண்டுகொள்ளாமல், பட்டியலின மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிகிறது. அவ்வாறு சாதி பிரச்னையால் பாதிக்கப்படும் மாணவர்களின் பெற்றோர் காவல் துறை, தனி வட்டாட்சியர், கோட்டாட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இந்நிலையில், இந்தப் பிரச்னைக்கு சரியான முடிவை நோக்கி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இது குறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், “கல்லூரியில் நடைபெறும் சாதி, மத சண்டைகளுக்கு கல்லூரி பேராசிரியர்களும் உடந்தையாக இருக்கின்றனர். எந்தத் தகராறும் ஏற்பட்டாலும் தவறு செய்தது யார் என்பதை விசாரிக்காமல் பட்டியலின மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முறையல்ல.
இதனால், பட்டியலின மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் இதுபோன்ற சாதி அரசியல் கல்லூரிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்” என்றனர்.