தமிழகத்தில் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. மேலும் தமிழக அரசு, மக்கள் சிரமமில்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக மாபெரும் தடுப்பூசி மையம் அமைத்து தடுப்பூசி செலுத்தி வந்தது.
இப்போதும் தொடர்ந்து மாபெரும் தடுப்பூசி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழகத்தில் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வருவதால் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. பிப்ரவரி மாதம் நாளொன்றுக்கு 1.6 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் நாளொன்றுக்கு 60 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படுகிறது. இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தபோது ‘தமிழகத்தில் இன்னும் 44 லட்சம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 1.37 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை’ என்று சுட்டிக்காட்டியிருந்தார்.