நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வரும் சூழ்நிலையில், மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் பெண்கள் தண்ணீருக்காக உயிரைப் பணயம் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாசிக்கிலுள்ள ரோஹிலே கிராமத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பெண்கள் தங்களது உயிரைப்பணயம் வைத்து தண்ணீர் எடுக்கக் கிணற்றில் இறங்குகின்றனர். இதில் ஒரு பெண்மணி கூறியதாவது, கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு பெண்கள் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருகிறார்கள். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிணற்றுக்குள் இறங்கி நீர் எடுக்க வேண்டியுள்ளது என்று கூறினார். இதையடுத்து மாணவி ஒருவர் கூறியதாவது, நான் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறேன்.
எங்களது கிராமத்தில் தண்ணீர் கிடையாது. இதனால் தண்ணீர் எடுக்கத் தொலைதூர கிராமத்திற்குச் செல்கிறோம். சில நேரங்களில் தண்ணீர் எடுக்க வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அத்துடன் தேர்வுக்குக்கூட தாமதம் ஏற்படுகிறது என்று கூறினார். இந்நிலையில் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “குறைந்தபட்சம் ஜூன் வரை தண்ணீர் பற்றாக்குறைக்கான வாய்ப்புகளில்லை. கலெக்டர் அலுவலகத்திலிருந்து வரும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தனித்தனியாகக் குடிநீர் வைக்கிறோம், பாசனத்துக்கு தண்ணீர் ஒதுக்குகிறோம். இதன் காரணமாக குறைந்தது ஜூன்மாதம் வரை தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று கூறினார்.