வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக அரசு வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கு 5 மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில் தற்போது இருந்து அதற்கான பணிகளை பாஜக அரசு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்று பாஜக கட்சி இருந்தது .அதே உற்சாகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை துவங்கியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு செங்கல்பட்டு தமிழக பாஜக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமிழக பாஜக வேகமாக செயல்படுகிறது என கூறினார்.
மேலும் தமிழகத்தில் இருந்து பாஜக எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வர முடியும் என்று கூறினார், நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றால், தமிழகத்திற்கு 5 மத்திய அமைச்சர்கள் பதவிகளும், 50 ஆயிரம் கோடி நிதியும் கிடைக்கும் என்று தெரிவித்தார். எனவே வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் ஒவ்வொரு தொகுதிக்கும் பல நலத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.