விழுப்புரத்தில் உள்ள 90 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 5,000 லிட்டர் பால் ஊற்றி பாலாபிஷேகம் நடைபெற்றது.
விழுப்புரம் திரு. வி. க வீதியில் பிரசித்தி பெற்ற விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் லட்ச தீப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த வருடம் 99-வது ஆண்டாக லட்ச தீப திருவிழா கடந்த 10ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இந்த விழாவை ஒட்டி ஒவ்வொரு நாளும் ஆஞ்சநேயர் சாமிக்கு காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிந்து மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் வருடந்தோறும் சித்திரை மாதம் 1ஆம் தேதி குளக்கரையில் அமைந்துள்ள 90 அடி உயரமுள்ள ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பாலபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் 16 ஆவது ஆண்டாக பாலபிஷேகம் நடந்தது.
இந்த அபிஷேக விழாவில் பக்தர்கள் கொண்டுவந்து பாலையும் சேர்த்து மொத்தம் 5,000 லிட்டர் பால் ஊற்றி ஆஞ்சநேயர் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை அரசமங்கலம் வெங்கடேஷ் பாபு சுவாமிகள் நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமியை வழிபட்டு வந்தனர். மேலும் இந்த விழாவை முன்னிட்டு சகல தோஷங்களும், நோய்களும் நிவர்த்தியாக பெண்கள் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.