Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து பாதியிலேயே விலகி சானியா!

காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து இந்தியாவின் சானியா மிர்சா விலகிய நிலையில், இன்று மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்திலிருந்தும் பாதியிலேயே விலகினார்.

மெல்போர்னில் இந்த ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் நடைபெறுகிறது. இந்த நிலையில், வலது பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து தான் விலகுவதாக இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்திருந்தார்.

இருப்பினும், மகளிர் இரட்டையர் பிரிவில் உக்ரைனின் நடியா கிச்னோக்குடன் தான் விளையாடவுள்ளதாகவும் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து , மகளிர் இரட்டையர் பிரவு முதல் சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில், சானியா – நடியா இணை, சீனாவின் ஸின்யுன் ஹான் – லிங் ஹூ இணையை எதிர்கொண்டது.

இதில் முதல் செட் ஆட்டத்தை 2-6 என்ற கணக்கில் இழந்த சானியா ஜோடி அடுத்த செட்டில் 0-1 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கியிருந்தது. இந்த நிலையில் சானியாவின் வலது பின்னங்காலில் மீண்டும் வலி ஏற்பட அவர் இப்போட்டியிலிருந்து பாதியிலேயே விலகுவதாக தெரிவித்தார். இதனால், சீனாவின் ஸின்யுன் ஹான் – லிங் ஹூ ஜோடி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.

Sania Mirza

முன்னதாக, குழந்தை பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப்பின் டென்னிஸுக்குத் திரும்பிய சானியா தான் பங்கேற்ற முதல் தொடரிலேயே (ஹோபர்ட் ஓபன்) மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதனால் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் இவரது ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், அவர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

33 வயதான சானியா மிர்சா இதுவரை 2009இல் கலப்பு இரட்டையர் பிரிவிலும், 2016இல் மகளிர் இரட்டையர் பிரிவிலும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |