மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் முதல் தளத்தில் திடீரென ஒரு பெண் தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஒகளூர் நடுத்தெருவில் வசிக்கும் பாண்டியனின் மனைவி சரஸ்வதி என்பது தெரியவந்துள்ளது. தற்போது பாண்டியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரஸ்வதியின் குடும்பத்தினருக்கும் அவருடைய கொழுந்தனார் குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்சனை இருந்தது.
இதுகுறித்து சரஸ்வதி மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் முடிவில் சரஸ்வதி தனது வீட்டை காலி செய்துவிட்டு வாடகை வீட்டிற்கு சென்று விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் தனது வீட்டில் இருக்கும் பொருட்களை எடுக்க விடாமல் கொழுந்தனார் தகராறு செய்ததாகவும், இதனால் மன உளைச்சலில் தான் தற்கொலை செய்ய மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்ததாகவும் சரஸ்வதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.