சிஎஸ்கே அணியில் பௌலர்கள் சொதப்பல், ஓபனர் ருதுராஜின் பார்ம் ஆகிய இரண்டு விஷயங்கள் பெரும் பிரச்சனையாக உள்ளது. அதேபோல் ருதுராஜ் சிறப்பாக செயல்படாவிட்டாலும் அணியில் மற்றொரு ஓபனரான உத்தப்பா களத்தில் மிரட்டலாக விளையாடி வருகிறார். இதனை போலவே முகேஷ் சௌத்ரியும் முன்பை விட சிறப்பாக செயல்படுகிறார். பந்துவீச்சில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீபக் சஹார் வந்துவிட்டால் முழுமையாக தீர்ந்து விடும். சிஎஸ்கேவினர் தீபக் சஹாரின் வருகைக்காக தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த வாரம் தீபக் சஹாருக்கு தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் குணமாகி, அவர் பயிற்சியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியானது. எனவே ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் அவர் அணியில் இணைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பயிற்சி மேற்கொண்டு வந்த தீபக் சஹாருக்கு எதிர்பாராதவிதமாக முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் காயத்தின் தன்மை குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் ஐபிஎலில் இருந்து தீபக் சஹார் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பவர் பிளேவில் விக்கெட்டுகளை வீழ்த்தி தொடக்கத்தில் இருந்தே நெருக்கடியை ஏற்படுத்தக்கூடியவர் தீபக் சஹார். எனவே சிஎஸ்கே இவருக்கு மாற்றாக உத்வேகத்துடன் செயல்பட கூடிய மற்றொரு வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் சீனியர் பௌலர் இஷாந்த் ஷர்மாவை தீபக் சஹாருக்கு பதிலாக மாற்று வீரராக தேர்வு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.