தென்ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றமடைந்துள்ள 2 புதிய வகை கொரோனா வைரஸை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தென்ஆப்பிரிக்காவில் சென்ற வருடம் இறுதியில் கண்டறியப்பட்ட உருமாற்றமடைந்த ஒமிக்ரான் வகை கொரோனா தொடர்ந்து மரபணு மாற்றமடைந்து வருகிறது. இப்போது பல நாடுகளில் ஒமிக்ரான் எக்ஸ்இ எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் மேலும் 2 புதியவகை கொரோனா கிருமிகளை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதற்கு பிஏ 4 மற்றும் பிஏ 5 என்று பெயரிட்டு அதன் பரவும் தாக்கம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த புதியவகை கொரோனா வைரஸ்கள் அதிவேகமாக பரவுமா என்பது தொடர்பாக தகவல்கள் வெளியிடப்படவில்லை.
எனினும் தென்ஆப்பிரிக்கா மட்டுமின்றி பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க், போட்ஸ்வானா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் இந்த 2 வகை கொரோனா கிருமிகள் கண்டறியப்பட்டு இருப்பதாக தென்கொரிய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிஏ 4 மற்றும் பிஏ 5 போன்ற கிருமிகளின் இயல்புகள் தொடர்பாக தீவிர ஆய்வுகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் விரைவில் அதன் முடிவுகள் சர்வதேச மருத்துவ ஆய்வு இதழ்களில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். உலகம் முழுதும் டெல்டா, ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரும் சூழ்நிலையில், மேலும் 2 புதியவகை கொரோனா கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.