Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உங்கள் மகனுக்கு ரயில்வே வேலை…. முதியவரிடம் பணம் மோசடி…. 20 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல்….!!

முதியவரிடம் ரூ 20 லட்சத்தை மோசடி செய்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைப் பகுதியில் வசித்து வருபவர் குமார்(69). இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியதாவது, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் விஜயகுமார் உட்பட நான்கு பேர் எனது மகன் வித்யாசாகருக்கு ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி கொடுப்பதாக என்னிடம் கூறி பணம் கேட்டனர்.

இதையடுத்து அவர்களை நம்பி நான் விஜயகுமார் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ 13 லட்சம் அனுப்பினேன். மேலும் நேரில் ரூ 7 லட்சம் கொடுத்துள்ளேன். அதன்பின் அவர்கள் எனது மகனுக்கு ரயில்வே துறையில் பணி நியமன ஆணை கொடுத்தார்கள். ஆனால் அந்தப் பணி நியமன ஆணை போலியானது என்பது தெரியவந்தது. எனவே வேலை வாங்கி கொடுப்பதாக கூறி என்னிடம் 20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த விஜயகுமார் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் விஜயகுமார், குன்னூரில் உள்ள நிரஞ்சன், கோவையில் உள்ள சுதன், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரபு ஆகிய 4 பேரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |