தீயணைப்பு வீரர்களின் வீரவணக்க நினைவுச் சின்னத்தை நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சமூகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டிடும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்கப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இதே போல் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது காக்கும் பணி எங்கள் பணி என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். இவ்வாறு மக்கள் சேவையாற்றும் சில நிகழ்வுகளில் துறை பணியாளர்கள் தங்களது உயிரைத் துறக்க நேரிடுகிறது. இந்நிலையில் 1967 ஆம் ஆண்டு முதல் இதுபோன்று நிகழ்வுகளில் இதுவரை 33 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியின் நிமித்தமாக வீர மரணமடைந்துள்ளனர். அவ்வாறு வீர மரணமடைந்தவர்களை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் நாள் நீத்தார் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இவ்வாறு பணிநிமித்தம் வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக சென்னை, எழும்பூரில் உள்ள தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநரக வளாகத்தில் 25 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களின் வீரவணக்க நினைவுச் சின்னத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை பேராசிரியர்கள் மற்றும் சீர்திருத்த பணிகள் போன்ற துறைகளுக்கும் ரூபாய் 66.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் வீர வணக்க சின்னம் உள்ளிட்டவற்றை நேற்று (ஏப்ரல் 12) அன்று தலைமை செயலகத்தில் வைத்து காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். அதன்படி, உள் துறை சார்பில் 66 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 274 காவல் குடியிருப்புகள் ,11 காவல் நிலையங்கள்,3 காவல்துறை கட்டிடங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை பணியாளர்களுக்கான 18 குடியிருப்புகள் மற்றும் 58 குடியிருப்புகள் மற்றும் ஒரு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையம் ஆகியவற்றினை திறந்து வைத்துள்ளார்.