கேரளாவின் எர்ணாகுளம் நகரில் புகழ் பெற்ற மகாராஜாஸ் என்னும் கல்லூரி அமைந்திருக்கிறது. இதில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவ மாணவிகள் நேற்று பருவத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கன மழையை முன்னிட்டு மின்வினியோகம் தடைபட்டு கல்லூரியின் பல அறைகள் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் மாணவர்கள் திகைத்துப் போனார்கள். இதன்பின் மொபைல் போன் வெளிச்சத்தில் தேர்வு எழுதுமாறு மாணவர்களுக்கு தேர்வு கண்காணிப்பாளர் அனுமதி அளித்திருக்கிறார்.
மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதியை காற்றில் பறக்க விட்டு ஒரு கையில் பேனாவை பிடித்துக் கொண்டு மறு புறம் தேர்வு எழுதியுள்ளனர் மாணவர்கள். இது ஒரு சுயாட்சி கல்லூரி என்ற வகையில் அதிகாரிகள் தேர்வை ரத்து செய்து இருக்கலாம் அல்லது மாணவர்களை மறுதேர்வு எழுதும்படி கூறி இருக்கலாம் என கூறப்படுகிறது. 77 லட்சம் ரூபாய் செலவில் வாங்கிய ஜெனரேட்டர் மின்னுற்பத்தி பயன்பாடு என்னவாயிற்று என்று மாணவர்களால் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் இதுபற்றி கல்லூரி முதல்வர் அனில் கூறும்போது, தேர்வு சூப்பிரண்டிடம் இருந்து விளக்கம் கேட்டு பெற்றுள்ளோம். அதனை தேர்வுநிலை குழு நாளை புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளும் என கூறியிருக்கிறார்.
இறுதி முடிவு ஆட்சிக் குழு கூட்டத்தில் பேசி எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் கூறும்போது தேர்வு கண்காணிப்பாளர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கின்றனர். ரூபாய் 54 லட்சம் உயர் மின் அழுத்த மின்சாரம் பெற செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை பயன்படுத்துவதற்கு பதிலாக வேறு ஒன்று நடந்திருக்கிறது. ஜெனரேட்டர் போன்ற மாற்று ஏற்பாடு செய்ய அதிகாரிகள் முன்வர வில்லை என கூறியிருக்கிறார். தேர்வறையில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு பதிலாக, தேர்வை அதிகாரிகள் ரத்து செய்திருக்கலாம். ஏனெனில், எங்களுடைய கல்லூரி சுயாட்சி அந்தஸ்து பெற்றது ஆகும் என்று மற்றொரு விரிவுரையாளர் கூறியிருக்கிறார். இதனால், கல்லூரி வட்டாரத்தில் நகைப்புக்கு உரியவர்களாக நாங்கள் ஆகி விட்டோம் என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.