திருச்சி மாவட்டத்தில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
திருச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக சமயபுரம் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டிருக்கிறது. அதாவது ஞாயிற்றுக் கிழமை கொடி மரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் படம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இந்த குடியேற்றத்திற்கு பின் பல ஊர்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவையொட்டி அம்மன் ஒவ்வொரு நாளும் அன்ன வாகனம், பூத வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெள்ளி குதிரை வாகனம் என போன்ற பல வாகனங்களில் கோயிலை சுற்றி வலம் வருவார். இப்படி சிறப்பாக ஒன்பது நாட்கள் நிறைவடைந்து பத்தாம் நாள் தான் தேர்த்திருவிழா நடைபெறும். இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக இந்த கோவிலில் தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தேர் திருவிழாவையொட்டி ஏப்ரல் 19ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஏப்ரல் 19 ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த தேர்வு வழக்கம்போல நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்கள் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் சில குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக ஏப்ரல் 30ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.