மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு அவா்களின் இருப்பிடத்திலேயே கல்வி வழங்கும் திட்டம் ரூபாய் 8.11 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்புகள் வெளியிட்டார். அந்த வகையில் மாணவா்களின் தனித் திறன்களை மேம்படுத்தும் அடிப்படையிலும், கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவழித்திடவும் கோடைக் கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலாத் தலங்களில் நடத்தப்படும். பள்ளிப்பாடங்களைத் தவிா்த்து சூழலியல், தலைமைத்துவம், மனிதஉரிமை, சமூகநீதி, பெண்ணுரிமை மற்றும் எதிா்காலவியல் ஆகிய பொருண்மைகளில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சிகள் வழங்கப்படும். இதற்கிடையில் மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு அரசுப்பள்ளி மாணவா்களுக்குத் தொழில்நுட்ப அறிவு மற்றும் கணினி மொழி மீதான ஆா்வத்தை ஏற்படுத்த கணினி நிரல் மன்றங்கள், எதிா்காலத் தொழில்நுட்பமான ரோபோடிக் கற்றுக்கொள்ள ரோபோடிக் மன்றங்கள் பள்ளிகளில் ஏற்படுத்தப்படும்.
அதுமட்டுமல்லாமல் இணையப் பாதுகாப்பு மற்றும் எத்திக்கல் ஹேக்கிங் குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருடந்தோறும் மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படும். அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக படிக்கும் மாணவா்களிடம் 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் இருந்து ரூபாய் 200 தனிக் கட்டணமாக வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும். இதன் காரணமாக வருடந்தோறும் 3 லட்சம் மாணவா்கள் பயனடைவா். இதற்காக ஆகும் செலவினம் ரூபாய் 6 கோடியை அரசே ஏற்கும். பலவகைக் குறைபாடுகள் காரணமாக பள்ளிக்கு வரஇயலாத 10,146 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி, அவா்களின் கற்றல் சூழலை மேம்படுத்துவதற்கு ரூபாய் 8.11 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.