பள்ளிகொண்டா அருகில் செம்மரம் வெட்டுவதற்காக வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்தி விட்டு தப்பித்து சென்றனர்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்பூரில் இருந்து வேலூரை நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தக் காரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நிறுத்த முயன்றபோது நிற்காமல் வேகமாக சென்றது.
உடனே காவல்துறையினர் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி சென்று பள்ளிகொண்டா அடுத்த சின்னசேரி மேம்பாலம் அருகில் காரை மடக்கி நிறுத்தினார்கள். காரில் இருந்து காவல்துறையினர் இறங்குவதற்குள் காரில் இருந்த 6 -க்கும் அதிகமான நபர்கள் காரைவிட்டு இறங்கி தப்பித்து சென்று விட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமிக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு 10-க்கும் அதிகமான காவல் துறையினர் விரைந்து வந்து தப்பி ஓடிய நபர்கள் எங்கேயாவது மறைந்து இருக்கிறார்களா? என்று தேடிப் பார்த்தார்கள்.
ஆனால் மர்ம நபர்கள் தப்பித்துச் சென்றனர். இதையடுத்து அவர்கள் விட்டுச் சென்ற காரை சோதனை செய்து பார்த்தபோது, அதில் சமைப்பதற்கு தேவையான அரிசி, பருப்பு, தக்காளி உள்ளிட்ட பொருட்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அந்த காரை பறிமுதல் செய்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர். காரில் இருந்தவர்கள் செம்மரம் வெட்ட வந்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.