சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதி ஆட்டம் நேற்றுநடந்தது.
ஆண்கள் பிரிவில் தமிழக அணி 87-69 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 11-வது முறையாக தேசிய சீனியர் போட்டியில் பட்டம் கிடைத்துள்ளது. கர்நாடகா அணி இந்தியன் ரெயில்வேயை தோற்கடித்து 3-வது இடத்தை பிடித்தது.
பெண்கள் பிரிவில் இந்தியன் ரெயில்வே 131-82 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. தமிழக அணி கேரளாவை வென்று 3-வது இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சபாநாயகர் அப்பாவு பரிசுகளை வழங்கினார். முதலிடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.1 லட்சமும், 2-வது இடத்தை பிடித்த அணிகளுக்கு ரூ.75 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த அணிகளுக்கு ரூ.50 ஆயிரமும் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.