சீரைத் திருப்பி கேட்ட மாமியாருக்கு மிரட்டல் விடுத்த மருமகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகிலுள்ள பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவருடைய மகள் சலோமி என்பவருக்கும் லூர்து நகரில் வசித்து வரும் பாய்லர் ஆலை ஊழியரான சகாய சுரேஷ் என்ற நபருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்துக்குப்பின் கலைச்செல்வியின் மருமகனான சாகாய சுரேஷ் அவரது மனைவியை அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சலோமி கடந்த 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் மகள் இறந்து விட்டதால் சலோமிக்கு கொடுத்த சீர் வரிசையான நகைகள் மற்றும் நிலம், பணம் போன்றவற்றை மருமகன் சாகய சுரேஷிடம் கலைச்செல்வி திருப்பி கேட்டுள்ளார்.
ஆனால் அதை தரமறுத்த சகாய சுரேஷ் அவரது உறவினர்களுடன் சேர்ந்து கலைச்செல்வியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து கடந்த ஆண்டு திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கலைச்செல்வி புகார் அளித்துள்ளார். இதையறிந்த சகாய சுரேஷ் தலைமறைவாகியுள்ளார்.
ஆனால் காவல்துறையினர் விடாமல் அவரை கடந்த ஓராண்டாக தேடி வந்தனர். மேலும் கலைச்செல்வி இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐஜி பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்துள்ளார். அவரின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த சாகயசுரேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.