கோடை வெயிலின் காரணமாக பள்ளியின் நேரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் உடல்நிலை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திரா, தெலுங்கானா போன்ற சில மாநிலங்களில் பள்ளி செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி கோடைவிடுமுறை தொடங்கும்வரை காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பள்ளிகள் செயல்படும். இதனையடுத்து பள்ளியின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் வழிபாட்டு நேரம் 10 நிமிடங்களுகவும், இடைவேளை நேரம் 15 நிமிடங்கள் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து UPBEC செயலர் பிரதாப் சிங் பாகேல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதாவது 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 200 நாட்கள் 800 மணி நேரம் கற்பித்தல் நேரம் இருக்க வேண்டும் எனவும், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 220 நாட்கள் 1100 மணி நேரம் கற்பித்தல் நேரம் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து வீட்டுக் கணக்கெடுப்பு, பள்ளி சலோ அபியான் கீழ் மாணவர் சேர்க்கை இயக்கம், ஆப்ரேஷன் காயகல்பிம் செயல்பாடுகள் போன்ற நிர்வாக பணிகளுக்காக ஆசிரியர்கள் 1.30 வரை பள்ளிகளில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் மாணவர்களுக்கு குறைந்தது 45 மணி நேரம் கற்பித்தல் நேரத்தை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதன்பிறகு பள்ளி சீருடை, காலணிகள், ஸ்கூல் பேக் மற்றும் ஸ்வெட்டர் வாங்குவதற்கான பணத்தை பெற்றோர்களின் வங்கி கணக்கில் உரிய நேரத்தில் அனுப்பப்படுகிறதா என்பதையும் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.