Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பி.ஏ.பி கால்வாயில் தண்ணீர் திருடி விற்பனை… “கண்டுபிடித்த அதிகாரிகள்”.… 4 பம்பு செட்டுகளில் மின்சாரம் துண்டிப்பு…!!

பொள்ளாச்சியில் பி.ஏ.பி பிரதான கால்வாயில் தண்ணீரை திருடி விற்றதால் 4 பம்புசெட்டுகளில் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பி.ஏ.பி பாசனத் திட்டம் அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றது. தற்போது பாசனம் செய்யவதற்காக  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரதான வாய்க்காலில் செல்கின்ற தண்ணீரை சிலர் இரவு நேரத்தில் திருடுகின்றனர். இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை என்று விவசாயிகள் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகாரின் பேரில் கலெக்டர் சமீரன் உத்தரவின்படி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மேற்பார்வையில் தண்ணீர் திருட்டை தடுப்பதற்கு பொதுப்பணித் துறை, வருவாய் துறை, மின்சாரத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

இந்த குழுவை சேர்ந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பொள்ளாச்சி உட்கோட்டம் பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பி.ஏ.பி பிரதான வாய்க்காலில் ஒட்டி உள்ள கிணறுகளில் தண்ணீர் விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து கோலார்பட்டி கிராமத்திலுள்ள நிர்மலா, ராமலிங்கம், கண்ணன் மற்றும் ஆவலப்பம்பட்டியில் உள்ள நடராஜன் ஆகியோரின் விவசாய பம்பு செட்டுக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை அதிகாரிகள் துண்டித்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் பேசியதாவது, பி.ஏ.பி பிரதான கால்வாயில் இருந்து தண்ணீரை இரவு நேரத்தில் திருடி அதை கிணறுகளில் நிரப்பி வைக்கிறார்கள். அதன்பின்னர் அந்த தண்ணீரை பகல் நேரத்தில் லாரி மூலம் விற்பனை செய்கிறார்கள். இது சட்டத்திற்கு புறம்பான செயல். இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று விவசாயிகளை அறிவுறித்தியுள்ளோம். மேலும் சோதனையின்போது சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட விவசாயி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Categories

Tech |