உலகம் முழுவதும் டிஜிட்டல் கருவிகளின் செயல்பாடுகள் அதிகரித்து இருக்கிறது. அதாவது மொபைல் போன், டேப்லெட், கணினி, லேப்டாப், டிவி என்று பல மின்னணு கருவிகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் டிஜிட்டல் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. அத்துடன் சமூகவலைதள சாட்டிங் செயலிகளையும் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேசமயம் மாணவ – மாணவியர் சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்துவதால் தனிப்பட்ட முறையிலும் சமூகளவிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக உயர்கல்வி துறை சார்பாக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து கல்வியியல் கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “அனைத்து கல்லுாரிகளின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சமூகவலைதளங்களின் பயன்பாடுகளை கட்டுப்படுத்திகொள்ள வேண்டும். அதாவது தேவையற்ற தகவல்களை சமூகவலைதளங்களில் கவனிப்பது, பரிமாறுவது ஆகிய செயல்பாடுகள் மாணவ, மாணவியருக்கும் அவர்களின் பெற்றோருக்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். இது தொடர்பாக அனைத்து பி.எட் கல்லுாரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். மேலும் டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்களின் தவறான பயன்பா ஏற்படும் தீமைகள் தொடர்பாக மாணவர்களுக்கு குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூகவலைதள தீமைகள் தொடர்பாக கருத்தரங்குகள் நடத்த வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.