பெண் ஒருவர் வாலிபரை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் 35 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்காக தரகர் மூலம் பெண் பார்த்து வந்துள்ளனர். அப்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் வசிக்கும் தரகர் மூலமாக 35 வயதுடைய பெண்ணை வாலிபருக்கு திருமணம் செய்து வைப்பதாக பேசி முடித்தனர். அதன்பிறகு அந்த வாலிபர் தனது உறவினர்களுடன் பாளையங்கோட்டைக்கு சென்ற பெண் பார்த்துள்ளார்.
கடந்த மாதம் வாலிபர் அந்த பெண்ணை ஈரோட்டிற்கு அழைத்து சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த புதுப்பெண்ணும், தரகரும் திடீரென காணாமல் போய்விட்டனர். இதனால் வாலிபரின் உறவினர்கள் இரண்டு பேரையும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இதற்கிடையில் வீட்டில் இருந்த 1 லட்ச ரூபாய் காணாமல் போனது. இதனை அடுத்து வாலிபரின் உறவினர்கள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அந்த சமயத்தில் தரகரும், புதுப்பெண்ணும் பேருந்து நிலையத்திற்கு வந்ததால் வாலிபரின் உறவினர்கள் இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகள்கள் இருப்பதும், முதல் கணவரை பிரிந்து வாழ்ந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் தனக்கு 2 மகள்கள் இருப்பதை மறைத்து ஈரோடு வாலிபரை அந்த பெண் ஏமாற்றி இரண்டாவதாக திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.