மினி வேன் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருவில் ஆதர்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான பிரபா, தீபா ஆகியோருடன் காரை மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த காரை ஆதர்ஷா ஓட்டினார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விட்டல்நாயக்கன்பட்டியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பழைய இரும்பு பொருட்கள் ஏற்றி சென்ற மினி வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. ஆதர்ஷா லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த பிரபா மற்றும் தீபா ஆகிய 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.