தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி தஞ்சையில் மாநாடு நடைபெற்று வருகிறது.
23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனை வலியுறுத்தும் விதமாக தஞ்சையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் வேள்வி நடத்தப்பட்டது.
தமிழிலேயே அனைத்து வேதங்களும் இருப்பதாகவும் குடமுழுக்கும் தமிழில் நடத்தினால் பிரச்சனை ஏதும் இருக்காது என்றும் அதன் தலைமை குரு கூறினார். இந்த வேள்வியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆரியர்கள் பங்கேற்றனர். வேள்வி முடிவடைந்த பிறகு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ் சான்றோர்கள் பலர் பங்கேற்றனர். மேலும் தமிழ் மொழியில்தான் சிவன் பேசினார் ஆகையால் தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்கிறோம் என்றும், 63 நாயன்மார் நாயன்மார்களும் 12 ஆழ்வார்களும் அடியார்களும் வடலூர் வள்ளலார் பெருமான் அவர்கள் அனைவருமே தமிழில் வழியில் பூஜை செய்தவர்கள், தமிழ் மொழி மட்டுமே அவர்களுக்குத் தெரியும். வடமொழியின் ரிக் வேதத்தில் சிவன் என்ற வார்த்தையே கிடையாது. சிவனைப் பற்றி பேசாத ஒரு வேதம் எப்படி இந்து வேதமாக இருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.