Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடனே 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்க வேண்டும்… பொதுமக்கள் சாலை மறியல்…!!

தண்ணீர்பந்தல் கிராமத்தில் 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டில்  உள்ள கீழ் சிறுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் 100க்கும் அதிகமான பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மரம் நடுதல், நீர்வரத்து, கால்வாய் அமைத்தல் போன்ற பணிகளை செய்தனர். இதையடுத்து மதியம் மூன்று மணி ஆகியும் வருகை பதிவேட்டில் பணிசெய்த பணியாளர்கள் பெயர்களை களப்பணி பொறுப்பாளர் பதிவு செய்யாமல் இருந்துள்ளார்.

இதுகுறித்து பொதுமக்கள் கேட்கும்போது ஆன்லைனில் புதிய அடையாள அட்டை வந்தால் தான் வருகை பதிவேட்டில் பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார். இதையடுத்து பணியாளர்கள் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யாமல் தங்களை மாலைவரை வேலை செய்ய வைத்ததை கண்டித்தும், புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரியும் திடீரென்று திருவண்ணாமலை – தண்டராம்பட்டு  செல்லும் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது அந்த வழியாக வந்த பேருந்து உள்ளிட்ட வாகனங்களை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், வருகை பதிவேட்டில் பதிவு செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்டு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |