காணாமல் போன விவசாயி 18 நாட்களுக்குப் பிறகு மலைக் குன்றிற்கு அருகே எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கு அருகே இருக்கும் துத்திபட்டு கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய விவசாயி ரமாமணி என்பவர் சென்ற 20 ஆம் தேதி இரவு வயலுக்கு சென்ற பொழுது காணாமல் போனதால் இவரின் மனைவி சரசு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து ரமாமணி தேடி வந்த நிலையில் துத்திபட்டு ஏரி அருகே உள்ள மலைக் குன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், மலைக் குன்றின் மீது ஏறிபார்த்த நிலையில் ரமணியின் உடல் பாதி அழுகிய நிலையிலும் பாதி எலும்புக்கூடாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ரமாமணியின் குடும்பத்தாருக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் ரமணியின் உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியின் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். இதுபற்றி விசாரித்த காவல்துறையினருக்கு பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
அது என்னவென்றால் அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான சுந்தரமூர்த்தி மற்றும் பெருமாள் அவர்களின் விளைநிலத்தில் சாகுபடிக்காக இருக்கும் விளைநிலத்தில் காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் மின் வேலி அமைத்திருந்தனர். இந்த மின் வேலியில் சிக்கி ரமாமணி உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த இருவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் ரமாமணியின் உடலை தூக்கி மலைக்குன்றில் வீசி, எதுவும் தெரியாததுபோல் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.