ஏற்காட்டில் சாலையோர வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
சேலம் மாவட்டம், ஏற்காடு ஒண்டிகடை பகுதியில் சாலை ஓரம் நடைபாதையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர்.இந்த கடைகளினால் ஏற்காடு ஏரியும், அண்ணா பூங்காவும் மறைக்கப்படுவதாகவும், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்து ஏற்படுவதாகவும் புகார் வந்துள்ளது. இப்புகாரின் பேரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அந்த கடைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.
அதன்பின் அந்த கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்தது. சில கடைகளை அதன் உரிமையாளர்களே முன்வந்து அகற்றினார்கள். ஆனால் சில கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். இதற்கிடையில் சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் தனசேகரன் தலைமையில் அதிகாரிகளிடம் கடையை வைக்க வேறு இடத்தை ஒதுக்கி தரவேண்டும் என்று வியாபாரிகள் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால் சாலையோர வியாபாரிகளுக்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரி ஏற்காடு ஒண்டி கடை பகுதியில் நேற்று சாலையோர வியாபாரிகள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட தலைவர் தனசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நேரு ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த போராட்டத்தில் 100க்கும் அதிகமான சாலையோர வியாபாரிகள் கலந்துகொண்டு காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.