கரோனா வைரசால் 4 நாடுகளில் மொத்தம் 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் மரண பீதியில் உள்ளன.
20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய் மற்ற நாடுகளுக்கு பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கரோனா வைரசால் அமெரிக்காவில் ஒருவருக்கு நிமோனிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நோய் தடுப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில் எங்கே நமக்கும் பரவி விடுமோ என்ற பீதியில் பல்வேறு உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளனர்.
சீனாவில் உள்ள மனிதர்களை முதலில் தாக்கிய இந்த வைரஸ் அங்கிருந்து ஜப்பானுக்கு பரவி உள்ளது. பின்னர் தாய்லாந்து, தென்கொரியாவுக்கு பரவியுள்ளது. தற்போது இந்த 4 நாடுகளை சேர்த்து மொத்தம் 280 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தங்களுக்கான எச்சரிக்கையாக கருதிய பல்வேறு நாடுகள் சீனாவின் விமானத்தில் இருந்து வரும் பயணிகளை கடுமையாக பரிசோதித்து வருகின்றனர். ஒவ்வொரு நாடுகளுக்குள் படிப்படியாக பரவி வரும் கரோனாவால் உலக நாடுகள் மரண பீதியில் உள்ளனர்.