சிறுமியை மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலவாடி கிராமத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருடைய கணவர் இறந்து விட்டதால் மகன் சசிகுமாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சசிகுமார் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்திற்கு சென்றுள்ளார். அங்கு 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் சசிகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் சிறுமியிடம் தான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருப்பதாகவும், உன்னை காதலிப்பதாகவும் கூறி பழகியுள்ளார். இதனால் வாலிபர் சிறுமியின் பார்ப்பதற்காக அடிக்கடி சேலத்திற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவர் தனது செல்போனில் சிறுமியை நிர்வாண கோலத்தில் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். இந்த புகைப்படத்தை சிறுமியிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சம் அடைந்த சிறுமி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 1,70,000 பணத்தை எடுத்து வாலிபரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இருந்த பணத்தை எண்ணிப் பார்க்கும் போது பணம் குறைந்ததால் சிறுமியிடம் இதைப்பற்றி கேட்டுள்ளனர். இதற்கு சிறுமி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியின் செல்போனை வாங்கி பார்த்துள்ளனர். அதில் ரூபாய் 40 ஆயிரம் பணம் தரவேண்டும் எனவும், இல்லையெனில் நிர்வாண படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் எனவும் குறுஞ்செய்தி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அதன்பிறகு சிறுமி நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சேலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.