கஞ்சாவை ரூ 25 ஆயிரத்திற்கு வாங்கி ரூ 2 லட்சத்திற்கு விற்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால் அதை தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் தனிப்படை அமைக்கப்பட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டுவர்கள் பிடிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அறந்தாங்கியில் கைது செய்தவர்களுக்கு கஞ்சா விற்ற கோவை மாநகர ஆயுதப் படையில் பணிபுரியும் போலீஸ்காரர் கணேஷ் குமாரை கடந்த 3ஆம் தேதி தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின் போலீசார் தரப்பில் கூறியதாவது, கணேஷ்குமார் ஏற்கனவே கோவையில் பணியாற்றும் கால கட்டத்தில் கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்தார். அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் அவர் பணிக்கு வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டபோது சிக்கிக்கொண்டார்.
தேனியில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி பொள்ளாச்சி, கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு ஒரு கும்பல் விற்பனை செய்தது. அதில் 2 கிலோ கஞ்சாவை ரூ 25,000-க்கு வாங்கி அதனை ரூ2 லட்சம் வரை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தலைமறைவாக உள்ள கஞ்சா விற்பனை கும்பலின் தலைவனை விரைவில் பிடிக்கப்பட்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தனர்.