ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெற்ற தேசிய கட்சியான பாஜக விற்கு இன்று தமிழக சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் இருப்பது மிகப்பெரிய வளர்ச்சி தான். இதன் மூலமாக தமிழ்நாட்டில் ஒரு காலமும் மலரவே மலராது என சொல்லப்பட்டு வந்த பாஜகவின் தாமரை இன்று அங்கொன்றும், இங்கொன்றுமாக பூத்து இருப்பதால் அந்த கட்சியின் தலைமை பூரிப்படைந்து இருக்கிறது.
மேலும் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள் தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லும் அளவிற்கு கணிசமான வாக்குகளை பெற்றிருப்பது பாஜக மேலிடத்தை மேலும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. சட்டமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தல் என தமிழகத்தில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து வரும் பாஜக அடுத்து வரும் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எட்டுகால் பாய்ச்சலாக பெரிய அளவில் தடம் பதிக்க திட்டமிட்டிருக்கிறது.
கோவை நாகர்கோவில் என தமிழகத்தில் சில பகுதிகளில் பாஜகவிற்கு செல்வாக்கு இருக்கிறது.இந்நிலையில் தனது அடுத்த இலக்காக, பல்வேறு கட்சிகளில் உள்ள வன்னியர் சமூக பிரமுகர்களை வளைத்துப் போட்டு, பாஜகவின் செல்வாக்கு குறைவாக உள்ள வட மாவட்டங்களில் கட்சியை வலுப்பெற செய்வதே அண்ணாமலையின் மாஸ்டர் பிளான் என்கிறது கமலாலய வட்டாரங்கள்.
வன்னியர் சமூகத்தினர் அதிகமாக உள்ள கட்சியான பாமகவில், அதன் நிறுவனர் ராமதாஸ் செய்துவரும் குடும்ப அரசியல், வன்னியர் கல்வி அறக்கட்டளையை தமது பெயருக்கு மாற்றியது என்பன போன்ற மருத்துவர் ஐயாவின் நடவடிக்கையால் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த சாதனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் பாஜக பாமக வன்னியர் சமூக நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் தன் பக்கம் இழுக்கும் முக்கிய பணியை உலக புகழ் பெற்ற ஹிந்து ஆன்மீக வாதி ஒருவர் வசம் ஒப்படைத்தது கொடுத்துள்ளது.
இந்த அசைன்மென்ட்டை செவ்வனே செய்து வரும் இந்த ஆன்மீக வாதி பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் உள்ள வன்னிய சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் ரகசிய ஆலோசனை நடத்துகிறாராம். வன்னிய சமூகம் முக்கிய புள்ளிகள் பாஜகவில் ஐக்கியமாகும் சம்பவம் விரைவில் நடைபெறும் என தமிழக அரசியல் வட்டாரம் தெரிவித்துள்ளது.