மலையில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் செடி, கொடிகள் அனைத்தும் எரிந்து நாசமானது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் ஏலகிரி மலையில் மூலிகைச் செடி, கொடிகள், அரிய வகை மரங்கள் மற்றும் விலங்குகள், உயிரினங்கள் வசித்து வருகின்றது. இந்நிலையில் இங்குள்ள மலை அடிவாரத்தில் இருக்கும் பகுதிகளில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு புகை பிடித்து அதை அணைக்காமல் போட்டு விடுவதால் சருகுகள் மூலம் தீப்பற்றி விடுகிறது. இந்நிலையில் கடந்த மாதத்தில் ஏலகிரி மலையில் மூன்று முறை மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
இதனால் மலையில் இருந்த அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. இதனையடுத்து மலையடிவாரத்தில் ஊசி நாட்டான் வட்டம் உள்பட பல பகுதிகளில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இந்த தீ மளமளவென பரவி மலையின் உச்சிப் பகுதி வரை சென்றதால் 300 புங்கன் கன்று, 300 வேப்பங்கன்று, மூலிகைச் செடி, கொடிகள் மற்றும் அரிய வகை மரங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களை வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.