கடந்த மாதம் 18ஆம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பின்னர் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மானியம் தொடர்பான விவாதம் நடத்துவதற்காக நாளை(6ஆம் தேதி) சட்ட சபை கூடவுள்ளது. இந்த சட்டசபை கூட்டத்தை எவ்வாறு நடத்துவது.? என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். துறை ரீதியான செயலாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்த பல்வேறு விவகாரங்களை கேட்டறிந்தார்.
தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் விதித்து வருகின்றனர். அதோடு இது தொடர்பாக நாளை கூடவுள்ள சட்டப் பேரவையில் விவாதம் மற்றும் கேள்வி எழுப்பவும் எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் விவகாரமும் முதல்வரை மிகவும் அப்செட் ஆக்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பம் முதலே இதுபோன்ற எந்த அவப்பெயரும் கட்சிக்கும் ஆட்சிக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் தெளிவாக இருந்ததாகவும் ஆனால் அமைச்சர் ராஜகண்ணப்பன் இப்படி ஒரு விவகாரத்தை எழுப்பி விடுவார் என முதல்வர் நினைத்துக்கூட பார்க்கவில்லை எனவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்களிடம் துறை ரீதியான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறும், வீண் சர்ச்சைகளில் சிக்க வேண்டாம் எனவும், இந்த ஒருமுறைதான் இதற்குமேல் இதுபோன்ற புகார்கள் வரும்பட்சத்தில் என் நடவடிக்கை வேற மாதிரி இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.