தி.மு.க பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை அப்பாசாமி தெருவில் தி.மு.க பிரமுகரான சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாரிமுனை பேருந்து நிலையத்தில் பழக்கடை மற்றும் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் பாரிமுனையில் தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்கள் தண்ணீர்பந்தல் அருகே நின்று கொண்டிருந்த சௌந்தரராஜனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சௌந்தர்ராஜனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.
அதாவது சௌந்தர்ராஜன் அ.தி.மு.க-வில் இருந்த போது தண்ணீர் பந்தல் அமைத்து அதே பகுதியில் தற்போது தி.மு.க-வில் இணைந்ததையடுத்து தண்ணீர் பந்தல் அமைத்துள்ளார். இதுதொடர்பாக சௌந்தரராஜனுக்கும், வேறு ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த இரு தரப்பினரையும் காவல்நிலையத்தில் ஏற்கனவே சமரசம் செய்து வைத்துள்ளனர். எனவே முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.