பெரியாரை பற்றி பேசும்போது யோசித்து சிந்தித்து பேசவேண்டும் என்று நண்பர் ரஜினிக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் ரஜினிக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.
வாய்க்கு வந்த கருத்துகளை ரஜினி பேசிவருவதாகவும், பெரியார் குறித்து அவதூறு பரப்பியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்தனர். அதுமட்டுமின்றி மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினிகாந்தின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் வெளிப்படையாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இந்த சூழலில் இன்று காலை சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. இல்லாத ஒன்றையோ, கற்பனையாகவோ, தவறாகவோ எதுவும் நான் கூறவில்லை. நான் கேள்விப்பட்ட, 2017ஆம் ஆண்டு அவுட்லுக் பத்திரிகைகளில் வந்ததை தான் நான் பேசினேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்கமாட்டேன், வருத்தமும் தெரிவிக்கமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் நடைபெற்ற பின் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ரஜினி அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். ரஜினியிடம் நான் ஒன்றை விரும்பி கேட்டுக்கொள்கிறேன். 95 ஆண்டு காலம் தமிழினத்திற்காக வாழ்ந்து போராடியவர் பெரியார். பெரியாரை பற்றி பேசும்போது யோசித்து சிந்தித்து பேசவேண்டும் என்பதே நண்பர் ரஜினிக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்று தெரிவித்தார்.