ஆப்கானிஸ்தானில் பண பரிமாற்ற சந்தையில் குண்டுவீச்சு சம்பவத்தில் 15 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கிற ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் ஒரு பணபரிமாற்ற சந்தை இயங்கி கொண்டு இருக்கிறது. அங்கு கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்த ஒரு கொள்ளையன் கையெறி குண்டை வீசியுள்ளார். அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு நான்குபுறமும் ஓட்டம் எடுத்துள்ளனர். இருப்பினும் இந்த குண்டு சம்பவத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தை நேரில் கண்ட வாயிஸ் அகமது என்ற பணபரிமாற்றாளர் கூறும்போது, “பணபரிமாற்றாளர்கள் செயல்பட தொடங்கிய நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது” என குறிப்பிட்டுள்ளார். பல மாதங்களுக்குப் பிறகு காபூலில் இருந்து குண்டு வெடித்திருப்பது அங்கு வாழும் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.